திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து காட்சியளிக்கிறார். இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வன்னி மரமாகும்.
தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட முத்தரசசோழன் முருகப்பெருமானுக்கு கோயில் நிர்மாணிக்க விரும்பினான். ஒரு சிற்பியை அழைத்து சிலையை வடிக்க உத்தரவிட்டான். சிற்பி ஆறு திருமுகங்களுடன் மயில்மீது வள்ளி தெய்வானையுடன் அமர்ந்த கோலத்தில் சிலையை வடித்தான். அதன் அழகைக் கண்ட மன்னன் இதேபோல் வேறு யார்க்கும் செய்யக்கூடாது என்று எண்ணி அந்தச் சிற்பியின் கட்டை விரலை துண்டித்தான். சிற்பி இறைவனின் திருவருளால் எட்டிக்குடியில் இன்னொரு சிற்பத்தைச் செதுக்கினான். அதனால் மன்னன் கோபமடைந்து சிற்பியின் கண்களைக் குருடாக்குமாறு உத்தரவிட்டான். அந்த நிலையிலும் சிற்பி முருகப் பெருமானின் சிலையை வடித்தான். ஆறுமுகப் பெருமானின் கருணையினால் இழந்த கட்டை விரலையும், கண்கள் இரண்டையும் பெற்றான். எனவே இத்தலத்திற்கு 'எண்கண்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது. |